'புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது குறித்து, 2 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன்' என்று ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.
இந்த நிலையில், மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று முதலில் 14 பேர் மீதும், பின்னர் 101 நபர்கள் மீதும் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்த நிலையில்,3 பேர் மட்டுமே சோதனைக்கு வந்திருக்கிறார்கள். மற்றவர்களில் 11 பேர் எங்கள் மீது சோதனையை நடத்தக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.
தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணாவை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்திருக்கிறது. அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு பக்கத்திலேயே புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "விசாரணையில் எந்த தொய்வும் இல்லை. அதே நேரத்தில் நிகழ்ந்த சம்பவத்தை கண்ணுற்ற சாட்சிகள் எவரும் இல்லை. அந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன வசதிகளும் கிடையாது. செல்போன் டவர்களும் கிடையாது.
இதனால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசும் விசாரணையை முறையாக துவக்கி வைத்திருக்கிறது.
இரண்டு மாதத்துக்குள் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன்" என்றார்.
- திருச்சி ஷானு