வேலூர் அருகே அரசு கொடுத்த வீட்டு மனையில் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் இருந்ததால் பயனாளிகள் பதறிப்போனார்கள்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் அருகே உள்ள கீழ் முட்டுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சொந்த இடம் இல்லாததால் அந்த பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் குடிசை போட்டு வசித்து வந்தனர்.
மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என்பதால் வெள்ளம் வந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. நரிக்குறவர்கள் 25 பேர், இருளர்கள் 12 பேர் என 37 பேர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்திருந்தனர்.
அவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் வேலூருக்கு முதல்வர் ஸ்டாலின் வந்த பொழுது இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட ஜே.சி.பி வைத்து சமன் செய்தனர். அப்பொழுது அந்த பகுதியில் இருந்து மனித மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகள் வெளியே வர மொத்த பேரும் பதறிப்போய் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முறையிட்டனர்.
ஆனால் அவர்கள், ‘அங்கிருந்து அரை கி.மீ. தூரத்திற்குள் சுடுகாடு இருந்தால் சிலர் இங்கு சுடுகாடு என்று தெரியாமல் உடலை புதைத்திருக்கலாம்’ என்று சொல்லி அனுப்பி உள்ளனர்.
ஒருவேளை வேறு யாராவது ரகசியமாக உடல்களை புதைதார்களா அல்லது அதிகாரிகள் சொல்வது போல் சுடுகாடு என்று புதைத்தார்களா என்று தெரியாமல் அவர்கள் பயந்து போய் உள்ளனர்.
நாம் பயனாளிகள் சிலரிடம் கேட்டபோது, ‘வேலூர் மாவட்ட கலெக்டரிடம் முறையிடலாமா அல்லது மந்திரவாதியை அழைத்து வந்து பரிகாரம் செய்யலாமா’ என்று குழம்பிப் போய் உள்ளோம் என்றனர்.
- அன்பு வேலாயுதம்