'வேலூர் மாவட்டத்தில் சமையலர் பணி பெற்றுத்தருவதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் 'கல்லா' கட்டிவருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், இடைத்தரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சத்துணவு குறைப்பாட்டை போக்கும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டத்தை கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார்.
முதற்கட்டமாக, ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த திட்டத்தின், சமையலர் பணிக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், சமையலர் பணி வாங்கிக் கொடுப்பதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் 'வசூல்' வேட்டையில் இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி ஆகிய 4 வட்டாரங்களிலும், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய 4 பேரூராட்சிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில், சமையலர் பணிக்குத் தற்காலிகப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணி நிரந்தரப் பணி கிடையாது. சமையலர் பணிக்கு ஆட்கள் நேர்மையான முறையிலே தேர்வு செய்யப்படும்.
எனவே, இந்த பணிக்கு யாராவது லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.