'வாணியம்பாடி அருகே ஒரு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் சாராயம் இலவசம், இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு அவியல் முட்டை இலவசம் என்று போட்டி போட்டு கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடக்கிறது' என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசு டாஸ்மாக் மூலம் தமிழக முழுவதும் மதுபானம் விற்பனை செய்து வருகிறது. இதனால், கள்ளச்சாராய விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதனை விற்பனை செய்வதும் சட்டப்படி தவறு. இருப்பினும் சிலர் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஈச்சம்பட்டுக் கிராமம் மலையடி ஓரத்தில் இரண்டு கடைகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. அதில், ஒரு கடையில் ஒரு பாக்கெட் சாராயம் வாங்கினால் ஒரு பாக்கெட் சாராயம் இலவசம் என்று விற்கப்படுகிறது. மற்றொரு கடையில், இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கினால் அவியல் முட்டை இலவசம் என்று போட்டி போட்டுக் கள்ளச்சாராயம் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.