திருச்சி: வங்கிக்கு பூட்டு போட முயன்ற விவசாயிகள் - என்ன காரணம்?
விவசாயிகள் வாங்கிய 10 ஆயிரம் ரூபாய் கடனை வசூல் செய்வதற்காக ஐ.ஓ.பி உள்ளிட்ட வங்கிகள் பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம், ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை போன்றவற்றில் பிடித்தம் செய்யக்கூடாது என, திருச்சி கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தைப் பூட்டும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கண்டோன்மென்ட் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு திரண்டு ஒப்பாரி வைத்துப் போராட்டம் நடத்தினர்.
மேலும், வங்கிக்கு பூட்டு போட வந்ததாலும் அந்தப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். மேலும் வங்கியின் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக, வங்கிக்கு வாடிக்கையாளர் வர முடியாமலும், வங்கியில் இருந்து ஊழியர்கள் வெளியே செல்ல முடியாமலும் திணறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "பிரதமர் மோடி ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் வங்கிக் கடன்களுக்கு வங்கியில் கிரடிட் ஆகும் சிறுகுறு தொகையினைப் பிடித்தம் செய்வதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மாதம்தோறும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் பென்ஷன் பணம் மாதம் ரூ.500, ஊனமுற்றோர் உதவி தொகை, விதவை உதவி தொகை, 100 நாள் பணம், வயது முதிர்ந்தோர் உதவித் தொகை போன்றவற்றை வங்கி விவசாயக் கடனுக்கு ஈடாகப் பிடிக்ககூடாது என்று மத்திய நிதித்துறை கூறிவிட்டது.
ஆனாலும், பிடித்தம் செய்யும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளரை கைது செய்யக்கோரி எங்க போராட்டம் நடக்கின்றது.
இன்று எங்களைக் கைது செய்யும் போலீஸார் மீண்டும் எங்களை வீட்டிற்குப் போகச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. எங்களை அங்கேயே சுட்டுக் கொன்றாலும் சரி, மத்திய சிறையில் அடைத்தாலும் சரி எங்க பணத்தைத் திருப்பித்தரும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.
- திருச்சி ஷானு