திருச்சி: விமான நிலைய விரிவாக்கம் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விவசாய நிலங்களை கொடுக்க விரும்பாத 21 விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்
விவசாயிகள்
விவசாயிகள்

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்களது நிலத்தை தர மறுத்து விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்திற்கு கீழக்குறிச்சி கிராம பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சிலர் நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசுக்கு கொடுத்துள்ளனர். தங்களுக்கான நிலத்திற்கு போதிய மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படாததால் விவசாய நிலங்களை கொடுக்க விரும்பாத 21 நபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

மேலும், '100 ஏக்கர் மதிப்புள்ள 21 விவசாய இடங்களில் விவசாய நடைபெறுவதாகவும் தற்போது வரை விவசாயம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இந்த இடத்தில் தரிசு நிலங்கள் எனக்கூறி குறைந்த விலையில் திருச்சி மாவட்டம் நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும், இதனால் நிலங்களை கொடுக்க விரும்பவில்லை' எனக்கூறி 21 நபர்களும் இணைந்து ஒரே வழக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிலையில், விவசாய இடத்திற்கு சொந்தமான 21 நபர்களை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அதன்பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 21 விவசாயிகள் மதியம் 2.30 மணி முதல் காத்திருந்த நிலையில் விவசாயிகளின் விருப்பத்தை கேட்க திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி சரியான நேரத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

மாலை 5.30 மணி வரை காத்திருந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் ஒவ்வொருவராக வந்து தன்னை பார்த்து இடம் தொடர்பாக விளக்கம் கொடுங்கள் என மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் '21 பேரும் ஒன்றாகவே ஒரே வழக்காக தொடர்ந்து உள்ளோம். ஆகையால் அனைவரிடமும் ஒன்றாகத்தான் கருத்து கேட்க வேண்டும்' எனக் கூறி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக அணுகாத காரணத்தினால் விவசாயிகள் கொதித்து எழுந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இதுகுறித்த தகவல் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், இந்த போராட்டம் தொடர்பாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் கென்னடி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

விவசாயிகள் உடன்படாததால், அதன் பிறகு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். அதன் பிறகு விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் வெளியே வந்த விவசாயிகளிடம் பேசியபோது, "எங்க நிலம் முழுமையான விவசாய நிலம். அதில் பல ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையெடுப்பு முறையில் எங்களிடம் விமான நிலைய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் நேரிலும், தபால் மூலமும் பேசினர்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக பொன்மலைப்பட்டி திருநகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தி விட்டனர். கல்கண்டார் கோட்டை, கிழக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் குறைவான நிதியை ஒதுக்கினர். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால் சுமார் 21 நபர்கள் ஒன்றிணைந்து நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம்.

உயர் நீதிமன்றம் விவசாயிகளிடம் சமூக பேச்சுவார்த்தை நடத்தி நிலம் எடுப்பதற்கு தேவையான முறையான அணுகுமுறையில் அணுகுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ தலைமையில் பேச்சுவார்த்தைக்கு 21 விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின்படி நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தோம். மதியம் அலுவலகம் வந்த எங்களை மாலை 5 மணி 30 நிமிடம் வரை காக்வைத்துவிட்டு சந்தித்த டி.ஆர்.ஓ அபிராமி மிகவும் அநாகரிமாக நடந்துகொண்டார்.

இங்கே வந்திருக்கும் விவசாயிகள் ஒவ்வொருவரும் வயது முதிர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் 10 ஏக்கர் 15 ஏக்கர் என நிலத்தை வைத்திருக்கும் நிலையில் இந்தம்மா பாட்டுக்கு வந்து உங்கட்ட இப்ப என்னால பேச முடியாது, ஒவ்வொருத்தரும் தனித் தனியா என்னை வந்து பாருங்கன்னு சொல்லிவிட்டு 5 நிமிடத்திலேயே கூட்ட அரங்கைவிட்டு வெளியேறிவிட்டார்.

நாங்கள் மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து பேச விரும்பவில்லை என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் அழைத்ததின்பேரிலேயே நாங்கள் ஆட்சியர் அலுவலகம் வந்தோம்.

எங்களுக்கு முறையான மரியாதையை கொடுக்காத டிஆர்ஓ அபிராமி எங்களை மரியாதைக் குறைவாக நடத்தினார் என்பதாலேயே ஆட்சியர் வரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினோம்.

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் வந்து இரண்டு நாட்களில் மீண்டும் உங்களை அழைக்கிறோம் எனச் சொல்லி சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இந்த அரங்கத்தை விட்டு இப்பொழுது வெளியேறி இருக்கின்றோம்" என்றனர்.

- திருச்சி ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com