திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் உலக சாதனை படைக்கும் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக சாதனை படைக்கும் சிலம்பம் நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்திய தலைவர் டாக்டர். வி.ஜே.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தா கலந்து கொண்டார். இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.கிருஷ்ணன், டாக்டர்.கவிதா செந்தில் மற்றும் பத்மஸ்ரீ. தாமோதரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.
இந்த நிலையில், திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோ.பி.சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாரின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
இந்த மூவரின் சாதனைகள் துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த உலக சாதனையை துபாயில் இருந்து வந்த ஐன்ஸ்டன் புத்தக இயக்குனர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.
மேலும், அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற 280-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். இந்த சாதனையானது அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
சிலம்பம் பயிற்சி கொடுத்து வரும் ஆசிரியர்கள் சிலரிடம் பேசிய போது, 'திருச்சி மேலப்புதூர் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுகிதா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அவர்களிடத்தில் திருச்சி கலை பண்பாட்டுத்துறையின் கலை இளமணி விருது பெற்றவர். சுதந்திர தினத்தில் சமூக சேவகி சான்றிதழ் பெற்றவர். துபாயில் நடைபெற்ற விழா மற்றும் சிங்கப்பூர் தமிழ் சங்கத்தின் விருது பெற்றவர்.
இவரது தந்தை மோகன், திருச்சியில் சுகி பிரிண்டர்ஸ் என்கிற பெயரில் ஒரு அச்சகத்தை நடத்தி வருகிறார். சிறுவயது முதலே பல்வேறு சிலம்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் சுகிதா, திருச்சி மக்கள் மத்தியில் பெருமைக்குரிய பெண்ணாக மாறியுள்ளார்' என்கின்றனர் பெருமையாக.
- திருச்சி ஷானு