தஞ்சாவூர்: ‘பா.ஜ.க-வில் சேருபவர்கள் எல்லாம் போலீசால் தேடப்படுபவர்கள்’ - டி.ஆர்.பாலு பேட்டி

பா.ஜ.க-வில் சேருபவர்கள் எல்லாம் போலீசால் தேடப்படுபவர்கள் என டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

தஞ்சாவூர் மாநகர தி.மு.க சார்பில் காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் தஞ்சை பழைய பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசும்போது ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏலம் அறிவிப்பு வந்தவுடன் உடனடியாக தமிழக முதல்வர் டெல்லியில் உள்ள என்னை தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்துக் கூறி, துறை அமைச்சரிடம் பேசி கடிதம் அனுப்பி ஏலத்தை நிறுத்த வைத்தோம்.

இப்போது யார் யாரோ பாராட்டு விழா நடத்திக் கொள்கின்றனர். அரசியலில் பேச தகுதி இல்லாதவர்தான் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் என்னை பற்றி பேசியுள்ளார். நான் 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளார்.

அண்ணாமலைக்கு சூடு, சொரனை, மானம் இருந்தால் நீதிமன்றத்துக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இப்போது நான் நோட்டீஸ் கொடுத்து 12 நாட்களாகிவிட்டது. இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது என முடிவு செய்துவிட்டேன்.

வரும் 8ம் தேதி சைதாபேட்டை நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கை தொடர உள்ளேன். அதற்கு மேல் அண்ணாமலை மீது 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். சிவில் வழக்கு பின்னர் தொடரப்படும்.

அரசியல் நாகரீகம் என்பது முன்பு இருந்தது. இப்போது நாகரீகம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் உள்ளனர். பா.ஜ.க-வில் சேருபவர்கள் எல்லாம் போலீஸாரால் தேடப்படுவர்கள்தான்.

இதுபோன்ற ஆட்களை ஏன் சேர்க்கிறார்கள்? என்றால் வரும் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான். அதை தி.மு.க-வினர் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் நாம் செயல்பட வேண்டும்.

தி.மு.க தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது. அதை நீங்கள் செய்தால் இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி. தி.மு.க-வால் உருவாக்கப்பட்ட எஃகு கோட்டை.

கோட்டையை பார்த்து விமர்சனம் பன்னினால் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். ஆனால், கோட்டையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால் எங்களை தொட்டுப்பார்க்க நினைத்தால் என்ன நடக்கும் என தெரியாது.

தி.மு.க-வை அசைத்து பார்க்கவோ, தொட்டுப் பார்க்கவோ எந்த கொம்பனாலும் முடியாது. நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். பா.ஜ.க அண்ணாமலையை பற்றி யாரும் பேச வேண்டாம். தி.மு.க-வில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்கள்கூட பேச தகுதி இல்லாதவர் அண்ணாமலை’ என டி.ஆர்.பாலு பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com