திருவள்ளூர்: பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட சடலம் - தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

'இறந்தவர் உடலை பட்டா நிலத்தில் புதைக்கக் கூடாது என்றும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற்ற மயானத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர், உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார்.

புதைக்கப்பட்ட அந்த உடலைத் தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர், 'உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல, நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடுதான் உடல் புதைக்கப்பட்டது' என கூறினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 'உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும், பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது' என்றும், 'கிராமத்தில் மயானம் இல்லை என்றால், அரசு நிலத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன்தான் அந்த நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியும்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இறந்தவர் உடலைத் தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த நடவடிக்கைக்காக பாதுகாப்பு வழங்க வேண்டும்' என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com