குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வயதான தம்பதிகள், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ப. முத்தம்பட்டி அடுத்த சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலர் (55) இவர் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சீரங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் குடும்பத்தினருக்கும், எங்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது கணவர் தங்கவேல் (65)மீது சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த எனது கணவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் உரிய விசாரணையின்றி ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர்.
மேலும், கிராமத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஊர் கவுண்டர் ரமேஷ் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாக கூறினார்கள்.
இதனால், வீட்டிற்கு செல்ல முடியாமல் குடும்பத்துடன் நாங்கள் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதமாக தங்கி வருகிறோம்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், இவர்களின் சொத்தை அபகரிக்க சிலர் இதுபோன்று செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- அரவிந்த்.