திருப்பத்தூரில் வணிகர் சங்க தலைவர்கள் வெள்ளையன் மற்றும் விக்கிரமராஜா தரப்பு இடையே ஏற்பட்ட மோதலில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் அருண்குமார், பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மே 8 ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் ‘வணிகர் உரிமை முழக்கம் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாடு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
அதேபோல, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வெள்ளையன் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் செயல்படும் நிர்வாகிகள் வணிகர்களுக்கு மே 8-ம் தேதி கடைகளை அடைத்து விடுமுறை அளிக்க வேண்டும் என்றனர்.
இதற்கு, வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கடைகளை மூடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், இருசங்க நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் அருண்குமார், பத்மநாபன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அறிந்த இரண்டு தரப்பு வணிகர் சங்க நிர்வாகிகளும், அரசு மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால் வாணியம்பாடியில் பதற்றம் நிலவி வருகிறது.
- மேனகா அஜய்