திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த நாகதேவன் பட்டியல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில், வழக்கம்போல் கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, காலை வழக்கம்போல் வந்து கோவில் நடையை திறக்க முயன்றபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 ஆயிரம் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கக் காசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.