கோடை விடுமுறையையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், திருமலையில் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று 66 ஆயிரத்து 820 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், 36 ஆயிரத்து 905 பக்தர்கள் சுவாமிக்காக மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.29 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால், திருமலை சிலாதோரணம் அருகில் அமைக்கப்பட்ட நீண்ட வரிசையில் 5 கிலோமீட்டர் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இதனால், இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட் பெறும் பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
'பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் வி.ஐ.பி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ரத்து செய்யப்படுகிறது' என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.