ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்
ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்த மக்கள் - என்ன காரணம்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைக் காக்க உயிர் நீத்த 15 பேரின் நினைவாக நினைவகம் அமைத்திட வேண்டும், மே 22-ம் தேதியை "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவித்து அன்றைய நாளில் சூழலியலுக்காக போராடிய போராளிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும்" என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, துப்பாக்கிச்சூட்டை நடத்திய கொலையாளிகள் எவராக இருந்தாலும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி அந்த ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலைகள் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகியும் படுகொலைகளுக்கு காரணமான கொலையாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

சுற்றுச்சூழலைக் காக்க உயிர் நீத்த 15 பேரின் நினைவாக நினைவகம் அமைத்திட வேண்டும். மேலும், மே 22-ஐ "சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக" அறிவித்து அன்றைய நாளில் சூழலியலுக்காக போராடிய போராளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

- எஸ்.அண்ணாதுரை

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com