தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் 5 வருடமாகிறது. இதனையொட்டி, போராட்டக்காரர்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது. குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்த போராட்டம் 100 -நாள் நடந்தது. இதில், நூறாவது நாள் போராட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் 13 பேர் பலியாகினர்.
இதைத்தொடர்ந்து, வருடா வருடம் மே மாதம் 22-ம் தேதி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் படங்களுக்கு போராட்டக்காரர்கள் அஞ்சலி செலுத்தியும், அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் வீரவணக்கம் செலுத்தியும் வருகிறார்கள்.
இன்று துப்பாக்கிச்சூடு நடந்து ஐந்தாவது வருடமாகிறது. போராட்டக்காரர்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாக நடந்தன. இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கல்லறை தோட்டங்களில் கூடி வீர சபதம் எடுத்தனர்.
எனவே, அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்று 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். கலவர தடுப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.