தூத்துக்குடியில் தி.மு.க ஒன்றிய செயலாளரை கண்டித்து தி.மு.க நிர்வாகி ஒருவரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளராகவும், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மனாகவும் இருப்பவர் செங்குழி ரமேஷ். ஒன்றிய பகுதியில் இருக்கும் ஒருவர், எப்படி நகராட்சி துணை சேர்மன் ஆகலாம் என்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார் திருச்செந்தூர் நகர முன்னாள் செயலாளர் மந்திரமூர்த்தி.
இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அவர் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார். அமைச்சர் அதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால், புகாரை அறிவாலயத்துக்கு அனுப்பினார். அறிவாலயமும் அந்தப் புகாரைக் கண்டு கொள்ளவில்லை.
இதனால், நகராட்சி துணைச் சேர்மன் செங்குழி ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று மந்திரமூர்த்தி அறிவித்தார். அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, தனது வீட்டிலேயே அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். 3 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அவர், நாளை நகராட்சி அலுவலகம் முன்பு படுத்து உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.
இது பற்றி அவரிடம் கேட்டதற்கு. 'செங்குழி ரமேஷ் நகராட்சி துணைச் சேர்மன் ஆனதே தவறு. அதையும் மீறி நகராட்சி பொறியாளருக்கான அலுவலகத்தை ஆக்கிரமித்து அவர் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
அங்கிருந்து அவர் தனது சொந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார். அவரால் நகராட்சி அதிகாரிகளால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. எனவேதான், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.
இதற்கு நகராட்சி துணைச் சேர்மன் செங்குழி ரமேஷ் பதில் என்ன? அவரிடமே கேட்டோம் "அவர்(மந்திர மூர்த்தி) இப்போது கட்சியில் எந்த பதவியும் இல்லை.
அந்த விரக்தியில் எனக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். என்னை மிரட்டி பார்க்கிறார். நான் பயப்படவில்லை என்றதும் வீட்டிலேயே உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று நாடகம் ஆடுகிறார்' என்றார்.
- எஸ்.அண்ணாதுரை