சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில், ரசாயனக் குடோனில் இருந்து நச்சுப் புகை தொடர்ந்து வெளியேறி வருவதால், அப்பகுதியில் உள்ள பொது மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியாருக்கு சொந்தமான ரசாயனக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த ரசாயனக் கிடங்கில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில், தேசமடைந்த ரசாயனப் பொருட்களை ஆழமாக குழித்தோண்டி புதைக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அந்த குடோன் உரிமையாளர்கள் அவ்வாறு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருவதால், அந்த ரசாயன பொருட்களில் மழைநீர் கலந்து, நச்சு புகை தொடர்ந்து வெளியேறியது. இதனால், சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று நச்சுப் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாசு கட்டுப்பாடு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- சுரேகா எழில்