நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லோடு கனிமவளங்கள் கோவையில் இருந்து வெளி பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், கடத்தப்படுகின்றன. இதை தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறது’ என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொளுத்திப் போட்டுள்ளார்.
கோவை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம், கோவை சங்கனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி, 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடக்கிறது. எல்லா மாவட்டங்களிலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் பயன்பாடு என்று அத்தனை வகை குற்றங்களும் அமோகமாக நடக்கின்றன. இதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. இந்த இழி நிலையை சட்டசபை வழியே கவனத்துக்கு கொண்டு வந்தாலும் அதை வெளியே தெரியாமல் மூடி மறைக்கின்றனர். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் - ஒழுங்கு பற்றி 2 மணி நேரம் பேசினார். ஆனால் அவை வெளியே வரவேயில்லை.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மட்டுமில்லை, கனிமவள கொள்ளையும் ஆட்டம் போடுகிறது. கோவையில் இருந்து கேரளாவுக்கு தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.
குறிப்பாக, தி.மு.க-வினர் அதிக லஞ்சம் வசூலித்துக் கொண்டு கனிமங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவையின் கனிமவளம் சுரண்டப்பட்டுக் கொண்டே செல்வது மிகப்பெரிய ஆபத்து. 2 ஆண்டு தி.மு.க ஆட்சியில் கோவைக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. இதையெல்லாம் பற்றி கோவை மாவட்டத்தின் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து நியாயம் கேட்க இருக்கிறோம்.
ரூபாய் 30 ஆயிரம் கோடி ஊழல் பற்றி நிதியமைச்சர் பேசியிருக்கிறார், அதைப் பற்றி தி.மு.க-வினர் வாய் திறக்க மறுக்கின்றனர். ஆனால், 12 மணி நேர வேலை சட்டத்தை நிறுத்தியதை சாதனையாக பேசுகிறார்கள். அதை கூட்டணி கட்சியினர் பாராட்டுகின்றனர். இதெல்லாம் வேதனையாக இருக்கிறது” என்று விளாசினார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி சொல்வது போல் கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளை நடக்கிறதா? என்று சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசிபோது, 'வேலுமணி பேச்சு நூற்று நூறு சதவீதம் உண்மை. கோவை மாவட்டத்தில் அடங்கும் கிணத்துக்கடவு தொகுதியில் எக்கச்சக்க கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும் டன் கணக்கில் கற்கள் உடைக்கப்பட்டு உள் கிராம சாலைகளின் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.
உதாரணத்துக்கு, 100 டன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தால் ஒரு நாளைக்கு 300 முதல் 400 டன் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், இது ஏதோ இந்த தி.மு.க ஆட்சியில்தான் நடக்கிறது என்று இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் இதுதான் நடந்தது. ஆனால் இவ்வளவு அதிகமாக கடத்தப்படவில்லை.
இதை தடுக்க வேண்டிய கனிமவளத்துறை உள்ளிட்ட எந்த துறையும் தட்டிக் கேட்பதுமில்லை, தடுப்பதுமில்லை. கல் உடைக்கப்படும் இடத்தில் துவங்கி, கேரள மாநில எல்லையான செக்போஸ்ட் வரையில் அத்தனை இடங்களிலும் முறையாக கவனிக்கப்படுவதால் எந்த தங்கு தடையுமின்றி இந்த கடத்தல் தினமும் அரங்கேறி வருகிறது.
எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனுமில்லை. இந்த அத்துமீறலை ஆதாரத்துடன் துவக்கத்திலேயே செய்தி வெளியானது. அப்போதே, அதிகாரிகள் விழித்திருந்தால் இன்றைக்கு பல்லாயிரம் லோடு கனிமவள சுரண்டல் தடுக்கபட்டிருக்கும்.
கோவை மாவட்டத்தில் கனிமவள சுரண்டல் தொடர்ந்து கொண்டே இருந்தால் மிகப்பெரிய இயற்கை சமநிலை சீர்கேட்டை கோவை சந்திக்கும். எதிர்காலத்தில் நிலநடுக்கம் உள்ளிட்ட அழிவுகளுக்கும் வாய்ப்புகள் உருவாகலாம்' என்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து கோவை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, 'அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கனிமவளங்களை எடுக்க அனுமதிப்பதில்லை. எங்கேயாவது முறைகேடு நடந்தால் உடனடியாக அங்கே ஆய்வுக்கு செல்கிறோம். மேலும், லாரிகளை அடிக்கடி சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.
எல்லாம் சரி, தொடந்து நடைபெறும் இது போன்ற தவறுகளை நிரந்தரமாக தடுக்க என்ன செய்யப்போகிறது அரசு? என்பதே பொது மக்களின் மில்லியன் டாலர் கேள்வி.
- கோவை ஷக்தி