"கவாச் கருவி" இருந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடியாது' - ரயில்வே அமைச்சர் பேட்டி

ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

"கவாச் கருவி" இருந்திருந்தாலும் ஒடிசாவில் ரயில் விபத்தை தடுத்திருக்க முடியாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 293 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடைபெற்ற பகுதியில் உருகுலைந்த ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு - பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மீட்பு பணிகளை 2-வது நாளாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தார்.

அதில், கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுவிட்டன. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடத்த இடத்தில் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவை மீண்டும் துவக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர், விசாரணை அறிக்கை கொடுப்பார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில் விபத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது என்று தெரிய வந்துள்ளது.

ரயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை அல்ல. கவாச் கருவி இருந்திருந்தாலும் ஒடிசா ரயில் விபத்தை தடுத்திருக்க முடியாது என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com