டி.ஜி.பி. விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பதவி உயர்வு வழங்கக்கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்கக்கோரி ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் 870 கோடி ரூபாய் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குனரை கடத்தி பணம் பறித்ததாக அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரமோத் குமார், கடந்த 2012-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால், பணியிடை நீக்கத்திற்கு எதிராக பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் பணியமர்த்தும்படி 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவர் பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். தற்போது சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐ.ஜி.யாக பதவி வகித்து வருகிறார் பிரமோத் குமார்.

தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி பிரமோத் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தனக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும், நீண்டகாலமாக வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி தனக்கு வழக்கமாக வழங்கப்படும் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து டி.ஜி.பி. பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா அமர்வு, 'ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமாரின் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி' தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com