வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "மோக்கா" என்று பெயரிடப்பட்டுள்ளது. மோக்கா புயல் இன்று நள்ளிரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வரும் ஞாயிற்றுக்கிழமை (14-ம் தேதி) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி –முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மே 11-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம். தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு "மோக்கா" என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து வரும் 13-ம் தேதி அன்று சற்று வலுவிழந்து 14-ம் தேதி அன்று 120 முதல் 145 கி.மீ. மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14.05.2023 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மோக்கா புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.