சீர்காழி அருகே மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அரவிந்தராஜ் (22). இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பின்புறம் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிக்கு பழைய மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தை துண்டித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அரவிந்தராஜ் மீது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
இறந்த அரவிந்த் ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து பலியாகி வருவது தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.