புதுச்சேரி: ‘பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’ - கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை

புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.

வரும் 17ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் பள்ளிகளை நேரில் அணுகி பெற்று பூர்த்தி செய்து வரும் 9ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

விண்ணப்பங்கள் பெற்ற பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 12ந் தேதி காலை 9 மணிக்கு பள்ளிகளில் வெளியிடப்படும். அன்றே நேர்காணல் தேதி, நேரம் அறிவிக்கப்படும்.

மறுநாள் 13ம் தேதி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நாளின் இறுதியில் மீதமுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரவரிசை 14ம் தேதி வெளியிடப்பட்டு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கிய பிறகு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இடம் வழங்கப்படும்.

தனியார் பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியல் 16ந் தேதி வெளியிடப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கிய பின்னர் மீதமுள்ள இடங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும்.

வரும் 17ம் தேதி மதிப்பெண் இடஒதுக்கீடு முறையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளிகளில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த குழுவை அணுகி சந்தேகங்களை தீர்க்கலாம். பிளஸ் 1 வகுப்பில் சேர மதிப்பெண் பட்டியல், மாற்று, குடியுரிமை சான்று, பெற்றோர்களுடன் மாணவர்கள் வர வேண்டும். வகுப்பு அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கும் என, கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com