சேலம்: 130 கிலோ மீன்களில் கலப்படம் - அதிகாரிகள் சோதனையில் அம்பலம்

சூரமங்கலம் தனியார் மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்
மீன் மார்க்கெட்
மீன் மார்க்கெட்

சேலம் சூரமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பார்மலின் என்ற நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்த 130 கிலோ மீன்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாநகரம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது தனியார் மீன் விற்பனை நிலையம். இங்கு விற்பனை செய்யப்படும் மீன்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சூரமங்கலம் தனியார் மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு அதிக அளவிலான மீன்கள் இருப்பு வைத்திருப்பதும், அந்த மீன்கள் கெடாமல் பதப்படுத்துவதற்காக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளான பார்மலின் பயன்படுத்தி இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனயடுத்து, பார்மலின் கலந்த 130 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனர்.

பார்மலின் என்பது மருத்துவத்துறையில் பதப்படுத்தும் திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவுப் பொருட்களில் சேர்த்தால் சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ரசாயன கலப்பு மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர். எனவே, பார்மலின் கொண்டு மீன்களைப் பதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com