கர்நாடகாவிலிருந்து சேலம் வழியாக காரில் குட்கா கடத்தி வந்த மூன்று பேரை காவல்துறையினர் துரத்திப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 500 கிலோ குட்கா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவுலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்திவரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி பைபாஸ் சந்திப்பில் சேலம் மாநகர காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சுமார் 20 கிலோ மீட்டர் வரை துரத்திச்சென்று காக்காபாளையம் பிரிவில் அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து காரிலிருந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி லிங்குராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.