கடந்த நிதியாண்டில் ரூ.2.09 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.15 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரண பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்கினால், அந்த தொகையை வசூல் செய்ய சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் கடும் கெடுபிடி காட்டி வருகிறது.
ஆனால், பெரிய பெரிய நிறுவனங்களிடம் அதுபோல் கெடுபிடி காட்டாமல், அவர்கள் வாங்கிய கடனை வராக்கடனாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, இந்திய வங்கிகளில், விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, ஜதின் மேத்தா, ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
ஆனால், பல்வேறு காரணங்களைச் சொல்லி திருப்பிச் செலுத்தவில்லை. இதில், அதிகபட்சமாக மெகுல் சோக்ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் வராக்கடன் ரூ.7,848 கோடியாக உள்ளது. இந்த தகவல் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், இவை கடன் தள்ளுபடி அல்ல தள்ளி வைப்பு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் ரூ.2.09 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் ரூ.2.09 லட்சம் கோடி வராக்கடன்களை தள்ளி வைத்துள்ளன. இத்துடன், சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.57 லட்சம் கோடி கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.