ராமேஸ்வரம் கோயில் செயல் அலுவலர் திடீர் இடமாற்றம் - என்ன காரணம்?

நிர்வாக நலன் கருதியே பல்வேறு கோவில் அலுவலர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர் என அரசு தகவல்
ராமேஸ்வரம் திருக்கோயில்
ராமேஸ்வரம் திருக்கோயில்

நிர்வாக நலன் கருதி ராமேஸ்வரம் திருக்கோயில் செயல் அலுவலர் உள்ளிட்ட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரும், பா.ஜ.க முன்னணி தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், "என் மக்கள், என் மண்" நடைபயணத்தை துவங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்று வந்தார். அப்போது, அவரை அங்கிருந்த இணை ஆணையரும் செயல் அலுவலருமான மாரியப்பன் பிரம்மாண்டமாக மாலை மரியாதையுடன் வரவேற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.மாரியப்பன் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆகம விதிகளை மீறி மாரியப்பன் செயல்பட்ட குற்றச்சாட்டில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சர்வ கட்சியினர் தொடர்ச்சியாக கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் (05.06.2023)ம் தேதி தான் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக சிவராமகுமார் பொறுப்பேற்ற நிலையில் அவர் தற்போது ராமேஸ்வரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஸ்ரீரங்கம் இணை ஆணையருக்கு ஆளுங்கட்சி பிரமுகரால் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்ட நிலையில், தலைமையிடம் நேரடியாக பணியிட மாற்றம் கேட்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசு நிர்வாக விவகாரத்தில், எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது நிர்வாகம் சார்ந்த விசயம். இதில், அரசியலை புகுத்தக்கூடாது, பொது மக்கள் நலன் கருதி, அரசு ஒவ்வொரு முடிவையும் அரசு எடுக்கிறது என்றனர்.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com