காசோலையை கொடுத்து ஏமாற்றிய வழக்கில், தி.மு.க. முன்னாள் எம்.பி. ரித்திஷின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதம் 6 மாத சிறை தண்டனை வழங்கி காரைக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரி. இவர் தி.மு.க. முன்னாள் எம்.பி-யும், நடிகருமான ரித்தீஷ் என்பவரின் மனைவி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு காரைக்குடியில் உள்ள திருசெல்வம் என்பவரது நகைப் பட்டறையில் 60 லட்சம் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்கியுள்ளார்.
திருசெல்வம் ஏற்கனவே ரித்தீஷ் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் ஜோதீஸ்வரி நகையை பெற்றுக்கொண்டு 2 மாதம் தவணை கூறிச் சென்றுள்ளார்.
2 மாதம் கழித்து நகைக்கான தொகை 60 லட்சத்தை காசோலையாக கொடுத்துள்ளார். ஆனால், ஜோதீஸ்வரியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருச்செல்வம், இது குறித்து 2020-ம் ஆண்டு காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கு விசாரணை முடிவில், ஜோதீஸ்வரி குற்றவாளி என்றும், அவருக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டார்.