புதுக்கோட்டையில் 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 32 வயது இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கறம்பக்குடியை பகுதியைச் சேர்த்தவர் சதாம் உசேன் (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் அடுத்துள்ள பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். பின்னர், அங்கேயே வீடு எடுத்துத் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்குச் சுவீட் போன்றவைகளை வாங்கி கொடுத்துப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கிருந்த ஒரு சிறுவனுக்குத் தீனி வாங்கிக் கொடுத்தும், 10 ரூபாய் கொடுத்தும், நைசாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அந்த சிறுவன் சத்தம் போடவே, அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுவனை மிரட்டியுள்ளார். ஆனாலும், நடந்த சம்பவங்களை அந்தச் சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.
இதைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனது பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சதாம் உசேன் மீது குற்றச்சாட்டு உறுதியானது. இதனையடுத்து, சதாம் உசேனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.