பட்டுக்கோட்டையில் செல்போன் கடை உரிமையாளர் ஒருவரை மர்ம நபர்கள் அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலை, காந்தி சிலை அருகே செல்போன் மற்றும் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரங்கசாமியின் மகன் கண்ணன்.
பட்டுக்கோட்டையின் முக்கிய கடைத்தெரு பகுதியான அறந்தாங்கி சாலை பகுதியில் பகல் நேரத்தில் நூற்றுக்கணக்கான நபர்கள் நடமாடி கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில், கண்டியன் தெருவை சேர்ந்த தயாநிதி, சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது கடை ஊழியரையும் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கண்ணனை சிலர் தாக்கும் வீடியோ காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இது போன்ற அராஜகம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.