'யார் எந்த தடை விதித்தாலும், திட்டமிட்டபடி போகர் ஜெயந்தி விழா நடைபெற்றே தீரும்' என சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, தைப்பூச திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, நவராத்திரி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவராத்திரி திருவிழாவில் சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை கோயில் நிர்வாகத்தினர் தடுப்புகளை வைத்து அடைத்து வைத்து சுற்றி வரும் படி கூறினர். இது எங்களுடைய கோவில் என்றும் கோவில் சூப்பிரண்டு சந்திரமோகன் தகராறில் ஈடுபட்ட நிலையில், இந்து அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பழனி மலைக்கோவிலில் முருகன் சிலையை வடிவமைத்த போகர் சிலைக்கு பாராம்பரியமாக தொன்று தொட்டு ஆண்டு தோறும் போகர் ஜெயந்தி விழா, புலிப்பாணி ஆசிரமம் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது, போகர் ஜெயந்தி விழா வரும் 18-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், பழனி கோவில் இணை -ஆணையர் நடராஜன் புலிப்பாணி ஆசிரமத்திற்கு போகர் ஜெயந்தி விழா கொண்டாட தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில், சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'வரும் 18-ம் தேதி போகர் ஜெயந்தி விழா கொண்டாட தடை விதிப்பதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போகர் ஜெயந்தி விழா புதிதாக நடத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது தவறு. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவில் இணை -ஆணையர் நடராஜன் புலிப்பாணி ஆசிரமத்திற்கு தொடர்ச்சியாக இடையூறு செய்து வருகிறார்.
போகர் ஜெயந்தி விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறும். கோவில் நிர்வாகம் புலிப்பாணி சுவாமிகளை பூசகர்கள் என்று கூறியது தவறு. நவராத்திரி திருவிழாவில் பூசர்களுக்கு கோவில் சார்பில் எப்படி பட்டின பிரவேசம் செல்ல முடியும்? என சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும்போது போகர் சமாதியில் உள்ள கதவுகளை கோவில் நிர்வாகம் உடைத்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் புலிப்பாணி ஆசிரமத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
இதனால், இரண்டாவது மேல்முறையீடு கோவில் நிர்வாகம் செய்துள்ளது. நடந்த சம்பவங்களை பழனி கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளோம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி போகர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்' என்றார்.