பழனி: தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடை - காரணம் என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா, என மலைக்கோவில் தொன்று தொட்டு பாரம்பரியமாக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், போகர் ஜெயந்தி விழாவும் பழனி மலைக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது போகர் ஜெயந்தி விழா வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அமைந்துள்ள போகர் சன்னதியில் திருக்கோவில் சொத்துக்களான அருள்மிகு மரகதலிங்கம், அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உள்ளிட்ட விலை உயர்ந்த விக்கிரகங்களை சன்னதி பூசாரிகளின் சுவாதீனத்தில் ஒப்படைத்து பூஜை செய்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பூசாரிகள் பணிக்கான விதிகளை மீறி திருக்கோயில் பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், ஆகம விதிகளுக்கு முரணாகவும் தன்னிச்சையாகவும் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதனால், மலைக்கோவில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் திருவிழா ஏதும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தால் போகர் ஜெயந்தி விழா நடத்த தடை ஆணையை கோவில் இணை ஆணையர் நடராஜன் வழங்கியுள்ளார்.
மேலும், அன்றைய தினம் கோவில் நிர்வாகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டும் நிர்வாகம் தரப்பில் காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.