ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஊட்டியில் இந்த ஆண்டு கோடை விழா விரைவில் நடைபெற உள்ளது. விழாவில் முதன்முறையாக மே 13-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் முருகவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
அதில், 'மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது. இங்கு ஏற்படும் சிறிய சத்தம்கூட வனப்பகுதியில் அதிக ஒலியை ஏற்படுத்தும்,
இதனால், யானை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படும். பறவைகள் மோதினாலும் ஹெலிகாப்டர் பாதிக்கப்படும்' என தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 2021-ம் ஆண்டு மோசமான வானிலை காரணமாக இந்திய பாதுகாப்பு் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது' என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் டி.வி.சுரேஷ்குமாரும், தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனும் ஆஜராகி வாதாடினர்.
வழக்கு விசாரணை முடிவில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக் கூடாது என்றும், இந்த திட்டம் மூலம் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால், ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதிப்பதாக' நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, 'நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதை வரவேற்கிறோம். காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை சுற்றுலா எனும் பெயரில் முன்னெடுப்பதால் எவ்வித பலனும் இல்லை' என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.