காஞ்சிபுரத்தில், நியாய விலை கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழாவில், கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பூங்கொத்துக்குப் பதிலாக "தக்காளி"-களை கூடையில் வைத்து வரவேற்றனர்.
நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்று 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, தக்காளியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை் கடைகளில் பொதுமக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செட்டித்தெரு இரண்டாவது கூட்டறவு நியாய விலை கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பூங்கொத்துக்கு பதிலாக தக்காளிகளை கூடையில் வைத்து வரவேற்றனர்.
தற்போது, இருப்பதிலேயே விலை உயர்ந்த பொருள் என கூறி எம்.எல்.ஏ.எழிலரசன் தக்காளி கூடையை சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி வழங்கும் "மலிவு விலை தக்காளி விற்பனை திட்டத்தை" எம்.எல்.ஏ. எழிலரசன் துவக்கி வைத்தார்.