சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது - திருச்சியில் பரபரப்பு

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கவேண்டும் என சட்டம் உள்ளது. இதற்காக, அதிகாரிகளிடம் அனுகிய போது லஞ்சம் கேட்டதால் முக்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அலுவலர் கோவிந்தசாமி
அலுவலர் கோவிந்தசாமி

ஜி.எஸ்.டி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என நகைகடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய திருச்சி வணிகவரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியான் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகை பட்டறை என்ற தங்க நகைக்கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.

இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. அதற்காக தனது கடையின் பெயரில் ஜி.எஸ்.டி. சான்றிதழ் கேட்டு மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

வணிகவரித் துறையில் இருந்து ஜி.எஸ்.டி. சான்றிதழ் வழங்குவதற்கு அரசு கட்டணம் எதுவும் பெறப்படுவது கிடையாது. ஆனால், சேசுவின் விண்ணப்பத்தின் பேரில் நேற்று வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சேசுவின் கடையை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து, நேற்று மாலை சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜி.எஸ்.டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி, சேசுவிடம் ரூ.2 ஆயிரம் ரொக்கம் லஞ்சமாக கொடுத்தால் ஜி.எஸ்.டி. சான்றிதழ் உங்கள் கடை தேடி வரும். இல்லையெனில் வராது என்று கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டனிம் இன்று காலை புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று மதியம் ஒரு மணி அளவில் மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் சென்று மறைந்து நின்று கண்காணித்தனர்.

அப்போது, சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சமாக பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com