ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் எங்கே? பரபரப்பு தகவல்

கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து

'ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் தற்போது வரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர் ஆகும். அவர்களுக்கு உதவும் வகையிலும், தமிழர்களை மீட்கவும், தமிழக அரசு சார்பில் "ஹெல்ப்லைன்" உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அதிகாரிகளிடம் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபரங்களை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார்.

அத்துடன், ஓடிசா ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஆலோசனை செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒடிசா சென்றடைந்தனர். அங்கு அவர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து இன்று அதிகாலையில் 137 பேர் சிறப்பு ரயிலில் சென்னை வந்தனர்.

குறிப்பாக, விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, நாகராணி கோபி, கார்த்திக், ரகுநாத், மற்றும் அருண் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உறவினர்கள், 1070 மற்றும் 044-2859 3990 அல்லது 94458 69843 எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com