பிரபல ரவுடிகள் 3 பேர் கைது - போலீசார் அதிரடி

காவல்துறைக்கு இதுவரை போக்கு காட்டி வந்த பிரபல ரவுடி 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி முத்துகுமார்
போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி முத்துகுமார்

திருச்சியில் பிரபல ரவுடி 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ரவுடி முத்துகுமாரின் சகோதரிகளான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவர் ரோந்து வாகனத்தில் அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் மதுபான கடை அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை சோதனையிட்டபோது வாகனத்தில் இரண்டு அரிவாள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிரோ பிக் அப் வாகனத்தில் வந்த இருவரையும் போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது, அதில் வந்த ரவுடிகளும் அவர்களுக்கு ஆதரவாக மேலும், பெண்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து 5 பேர் கொண்ட காவல்துறையினரிடம் தகராறு செய்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்திரமோகன் மற்றும் வெற்றிமணி இருவரையும் கையால் தாக்கி விட்டு ரோந்து வாகனத்தை சேதப்படுத்தினர். மேலும், அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சந்திரமோகன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் தப்பி ஓடிய பிரபல ரவுடிகள் அரியமங்கலம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமார் ( 29 ), அவரது சகோதரர் இளவரசன் மற்றும் நண்பர் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், தப்பி ஓடிய ரவுடி முத்துகுமாரின் சகோதரிகளான ரேணுகாதேவி, கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட முத்துக்குமார் திருச்சியின் பிரபல ரவுடி மறைந்த கேபிள் சேகர் எனப்படும் பன்னி சேகரின் மகன் என்பதும், முத்துக்குமாரின் சகோதரி வழக்கறிஞர் பயிற்சி பெற்று வருவதும், இவரது தாயார் அ.தி.மு.கவின் முன்னாள் கவுன்சிலர் கயல்விழி சேகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com