பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு சில நேரங்களில், தங்களது ஆதார் எண், எந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்குத் குழப்பம் அல்லது தயக்கம் நீடித்து வருகிறது.
இதனால், வங்கி சேவை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும்போது அவதிப்படுகின்றனர். ஆதார் எண்ணுடன் தொடர்புடைய ஒரு முறை கடவுச் சொற்கள் வேறு ஏதேனும் எண்ணுக்குப் போய்விடுமோ என்றும் மக்கள் அச்சப்பட்டனர். இந்த விவகாரம் யு.ஐ.டி.ஏ.ஐ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், புதிய நடைமுறை கொண்டுவர திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்க இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, https://myaadhaar.uidai.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது mAadhaar செயலியில் ‘மின்னஞ்சல் மற்றும் செல் போன் எண்ணைச் சரிபார்க்க முடியும்.
குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதாருடன் இணைக்கப்படாத பட்சத்தில் அதனைத் தெரிவிக்கும். மேலும், அவர்கள் விரும்பினால், அந்த மொபைல் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபர் ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த செல் போன் எண் நினைவில் இல்லை என்றால், அது குறித்து அறிந்து கொள்ளும் வகையில், mAadhaar தளம் மற்றும் mAadhaar செயலியில், அவர்கள் ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த செல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களைப் பார்க்க முடியும்.
மேலும், மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ விரும்பினால் ஆதார் மையத்தில் அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.