நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திசையன்விளை, சங்கரன்கோயில், கோவிந்தாபேரி, நாகம்பட்டி, புளியங்குடி, பணகுடி ஆகிய 6 இடங்களில் மனோ கல்லூரி செயல்பட்டு வருகிறது.
கல்லூரி படிப்பிற்காக சிட்டிக்கு வர முடியாத ஏழை, எளிய மக்களுக்காக கிராமப்புறங்களில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்கல்லூரிகளில் 300 தற்காலிக பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
தற்போது, தேர்வு முடிந்து பேப்பர் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டு வரும் நிலையில், பல்கலைக்கழகம் சார்பில், மனோ கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
அதில், பேராசிரியர்கள் அனைவரும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரியிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மேலும், முதல்வர் பூவலிங்கத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக ஆணையை திரும்பப் பெறவேண்டும் என கோஷம் எழுப்பினர். பின்னர், போலீஸ் தலையிட்டு சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது வழக்கமான நடைமுறைதான். அவர்கள் யாருக்கும் வேலை போகாது. ஆண்டு தோறும் இப்படி ஒரு ஆர்டர் அப்புவது வழக்கம்தான். இந்த ஆண்டு இந்த ஆர்டரை யாரோ வெளியே கசிய விட்டதால் வந்த வினை இது' என்றார்.
- நெல்லை துரைசாமி