நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள டோல்கேட்டை மறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் போராட்டம் நடத்தியதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நெல்லை வந்தார். கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு, ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது, அவரை ஏராளமான கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். அவரை சந்திப்பதற்காக குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் 5 வாகனங்களில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள், நாங்குநேரி டோல்கேட்டில் வாகனங்களை நிறுத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டனர். அதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், கட்டணம் செலுத்தாமல் போக முடியாது என்று ஊழியர்கள் எச்சரித்தனர். உடனே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் டோல்கேட்டின் குறுகே கார்களை விட்டு மறித்தனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. சுமார் அரை மணி நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் டோல்கேட் நிர்வாகம் அவர்களை கட்டணமின்றி செல்ல அனுமதித்தனர்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி விளவங்கோடு தொகுதி செயலாளர் மோகன்ராஜ் கூறுகையில், 'சுங்கக் கட்டணம் எதுக்குங்க? மத்திய அரசு ரோடு போட்டிருக்கு, அதில் சுங்கம் வசூலிக்க இவர்கள் யார்? 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் இருக்கணும்.
ஆனால், நாகர்கோயிலில் டோல்கேட் இருக்கு, இதோ நாங்குநேரியில் டோல்கேட் இருக்கு. எல்லா டோல்கேட்டிலும் பண கொள்ளை அடிப்பது நியாயமா? சுங்கம் கட்ட முடியாது. இனிமேல் பொதுமக்களை திரட்டி டோல்கேட்டுகளை அடித்து நொறுக்குவோம். நிச்சயம் ஒரு நாள் இது நடக்கும்' என்றார்.