நாகப்பட்டினம் அருகே இறந்துபோன மகனுக்காக பட்டம் வாங்கிய பெற்றோர்களை கண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கண்ணீர்விட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் கண்ணன்- செல்வி தம்பதியினரின் மகன் தினேஷ். இவரது குடும்பம் மிகுந்த வறுமையான நிலையில் இருந்த போதும், ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார்.
இவர், தனது இறுதி ஆண்டு தேர்வை எழுதி ரிசல்ட் வருகைக்காக காத்திருந்தார். ஆனால், ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கவேண்டும் என்று, அங்குள்ள மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, யாரும் எதிர்பாரத விதமாக திடீரென படகு கவிழ்ந்ததில் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, அனைத்து படங்களிலும் தினேஷ் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டதாரியானார்.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், அந்த கல்லூரியில் பட்டமளிப்பு தற்போது நடைபெற்றது. இதில், 1,933 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது, பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டி தினேஷ் பெயர் வாசிக்கப்பட்டது. ஆனால் தினேஷ் உயிருடன் இல்லை. இதனால், தினேஷின் பெற்றோர் கண்ணீருடன் மேடையேறி, தினேஷின் பட்டத்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.