நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கல் கீழவெளி பகுதியில் உள்ள கருவேலங்காட்டில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் கிடந்துள்ளது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர் அருகே சிக்கல் கீழவெளி பகுதியில் உள்ள கருவேலங்காட்டில் அழுகிய நிலையில் மனித உடல் ஒன்று கிடப்பதை அந்தப்பக்கம் விறகு வெட்ட சென்ற பெண்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் கூறியதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை பார்த்த போது அது ஒரு பெண்ணின் உடல் என்று தெரிய வந்தது.
இது குறித்து அருகே உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை ஆராய்ந்தபோது, கீழையூர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா என்ற இளம் பெண் ஒருவர் கடந்த 30-ம் தேதி முதல் காணாமல் போன புகார் ஒன்று பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்களை அழைத்து அங்கே கிடந்த உடைகளை காட்டி விசாரித்தபோது ‘சுஷ்மிதா வீட்டை விட்டு வெளியேறிய தினம் இந்த உடையைத்தான் அணிந்திருந்தாள்’ என்று சொல்லவே அது சுஷ்மிதாவின் உடல்தான் என்று உறுதி செய்யப்பட்டது.
சுஷ்மிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தாகவும், விடுமுறையில் அவ்வப்போது ஊருக்கு வரும்போது அதே ஊரைச்சேர்ந்த பார்த்திபன் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதமும் ஊர் திருவிழாவுக்கு சுஷ்மிதா வந்துள்ளார். வந்தவர் கடந்த 30-ம் தேதி தேதி நாகைக்கு சென்று வருகிறேன் என்று கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர். இதற்கிடையே மறுநாள் மே 1-ம் தேதி தற்போது சுஷ்மிதா இறந்துகிடந்த இடத்திற்கு 2 கி.மீ தொலைவில் அந்தணப்பேட்டை என்ற இடத்தில் பார்த்திபன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடத்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இருவரும் தற்கொலை செய்துகொண்டிருந்தால் இருவரது உடலும் ஒரே இடத்தில் கிடந்திருக்க வேண்டும். ஆனால் 2 கி.மீ தூரம் தள்ளி பார்த்திபன் உடன் கிடக்க வேண்டிய காரணம் என்ன? சம்பவ தினத்தன்று சுஷ்மிதாவும், பார்த்திபனும் சந்தித்தபோது இருவருக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு கோபத்தில் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்டாரா?
இதனால் பயந்துபோன பார்த்திபன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை இவர்களது குடும்பத்தில் இந்த காதலை பிடிக்காதவர்கள் இருவரையும் அடித்து கொலை செய்து விட்டு பார்த்திபன் உடலை மட்டும் 2 கி.மீ தள்ளி தண்டவாளத்தில் வீசிவிட்டார்களா? அல்லது மர்மநபர்கள் சுஷ்மிதாவை கற்பழித்து கொலை செய்துள்ளார்களா? என்று பல்வேறு சந்தேகக் கேள்விகளுடன் போலீசாரின் விசாரணையை தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக, சுஷ்மிதாவின் அண்ணன் ஜெயசீலனுடன் பேசினோம். “சுஷ்மிதாவை அடித்துத்தான் யாரோ கொலை செய்திருக்கின்றனர். நாகை சென்று வருகிறேன் என்று புறப்பட்டபோது நன்றாக சந்தோஷமாகத்தான் சென்றாள். இரவு 11 மணியாகியும் வீடு திரும்பாததால் எங்களுக்கு பயமாகி அப்புறம் போலீசில் புகார் செய்தோம்.
அவளை காதலித்ததாக சொல்லப்படும் பார்த்திபனும் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள். இருவரும் ஒரே சமூகம் தான். எதற்காக என் தங்கையை கொலை செய்தார்கள் என்பதை போலீசார்தான் சீக்கிரம் கண்டுபிடிக்கவேண்டும்.” என்றார்.
கீழையூர் போலீசாரிடம் பேசினோம். “எல்லா கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. விரையில் உண்மையை கண்டுபிடித்துவிடுவோம்.” என்றனர்.