'ஆத்துக்கு பக்கம் - ஆத்துக்கு பக்கம் தண்ணிக்கு ததிங்கிணத்தோம்' - இது திருச்சி சோகம்

ஆற்றின் வடகரையில் தண்ணீர் கொஞ்சமாவது ஓடினால்தான் மனிதன் வாழவே முடியும்
காவிரி ஆறு
காவிரி ஆறு

தமிழகத்தின் அடையாளாக வர்ணிக்கப்படும் காவிரித்தாயின் கரையில் அமைந்துள்ள முசிறியில், பொது மக்கள் தண்ணீருக்கு போராடி வரும் அவலம் கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

இயற்கை வளத்தை சுரண்டிச் சுரண்டி மனிதன் இன்னும் எத்தனை கொடுமைகளை செய்யப் போகிறானோ தெரியவில்லை.

நம் கண் முன்னே காவிரி ஆறு வட பக்கம் முசிறியையும் தென் பக்கம் குளித்தலையையும் கரையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. குடகில் உற்பத்தியாகி வந்து பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி ஆற்றுக்கு இந்த இடத்தில் மட்டும் தான் ' அகண்ட காவிரி ' என்கிற சிறப்பு பெயர் உண்டு.

ஆனாலும், திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனு கொடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இத்தனைக்கும் ஸ்ரீராம சமுத்திரத்தில் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து பாசன வாய்க்கால்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பொன் விளையும் பூமியாக மாற்றி விட்டு போவதும் இதே காவேரி தான்.

முசிறி, சீனிவாசநல்லூர், மேலகாரைக்காடு போன்ற பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக அள்ளப்பட்ட அளவுக்கு அதிகமான மணல் தான் இந்த செயற்கை வறட்சிக்கு காரணம்.

மணல் அள்ளுவதற்காக ஆற்றின் உள்ளே மணலையும் வைக்கோலையும் கரும்புச் சக்கையையும் சேர்த்து போட்டு மேடு கட்டி அமைக்கப்பட்ட ' ரோதா ' எனப்படும் லாரி போகும் பாதைகளால் ஆற்றின் நீரோட்டம் மாறி இப்போது தண்ணீர் குறைவாக வரும்போது முசிறி பக்கம் தண்ணீரே வருவதில்லை.

குளித்தலை பக்கம் மட்டுமே நீர் ஓடுகிறது. ஆற்றின் வடகரையில் இருந்து நடுப்பகுதி வரை கிலோமீட்டர் கணக்கில் இப்படி அமைக்கப்பட்ட ரோதா, நீரின் பாதையை மாற்றி விட்டது.

சீலைப்பிள்ளையார் புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை மூலம் வெளியேறி வரும் தண்ணீர் வடகரையில் வந்தாலும் மணல் எடுக்கப்பட்ட இடங்களுக்கு வரும்போது பாதை மாறி தென்கரைக்கு, அதாவது குளித்தலை பகுதிக்கு போய் விடுகிறது.

இதனால், காவிரி ஆற்றின் கரையிலேயே அமைந்திருந்தாலும் முசிறி மற்றும் அதை ஒட்டி உள்ள ஆமூர், குணசீலம் உள்ளிட்ட பல கிராமங்கள் குடிதண்ணீருக்கு ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

முசிறி பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்நாதனிடம் பேசிய போது "வடகரையில் தண்ணீர் வருவதே இல்லை; முசிறி மக்கள் குளிப்பதற்கு ஆற்றுக்குள் இறங்கி நடுப்பகுதியை தாண்டி குளித்தலை பகுதியில் தான் போய் குளித்துவிட்டு வருகிறார்கள்.

முசிறி கரையோரமாக பஞ்சாயத்துக்காக போடப்பட்ட போரிலும் தண்ணீர் இல்லை. ஆற்றின் வடகரையில் முசிறி ஓரமாக தண்ணீர் கொஞ்சமாவது ஓடினால்தான் மனிதன் வாழவே முடியும்.

விவசாயம் சுத்தமா முடிஞ்சு போச்சு. சீப்ளாபுத்தூர், முசிறி, தொட்டியம் மூன்று இடங்களிலும் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட கொறம்பு (தண்ணீருக்குள் குழாய் பறித்து நடுவில் ஓடிவரும் நீரை கரையோரம் வரும்படி செய்யும் அமைப்பு) இருந்தது.

இப்ப இருக்கிற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரிடம் போய் 'இந்த கொறம்பு மூடி கிடக்குது வேலை பார்க்க வேண்டும்' என்று சொன்னால், 'அப்டின்னா என்ன?' என்று கேட்கிறார்" என்று சொல்லி வருத்தப்பட்டார்.

தொட்டியம், முசிறி பகுதியில் மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் கூட கீழே போய் விடுவதை ஒட்டி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தொட்டியம் எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் ராட்சத எந்திரங்கள் மூலம் பள்ளம் பறித்து காவிரி நீர் கொஞ்சமாக முசிறியின் கரையோரமாக போகும்படி செய்து கொடுத்திருக்கிறார் என்றாலும் இது போதாது என்பதால் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவு பெறாமலே இருக்கிறது.

- திருச்சி ஷானு.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com