தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 2 பேர் உடலை கொலை செய்து, திருச்சி மாவட்டம் துறையூரில் வீசிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தின் கீழே அரிவாள் வெட்டு காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. இது குறித்து அப்பகுதியினர் துறையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதேபோல், திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த முசிறி - துறையூர் செல்லும் மெயின் ரோட்டில் கண்ணனூர் அருகே பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அப்பகுதியினர் ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார், அவரை வெட்டிக் கொன்றவர்கள் யார்? என ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்களை ஒரே கும்பல்தான் வெட்டி கொலை செய்தனரா? வேறு பகுதிகளில் கொலை செய்து 2 பேரின் உடல்களை தனித்தனியாக வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு தெற்கு தெரு பாலத்தில், ரத்தக்கறை உடைந்த மது பாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, யாரையாவது அடித்து கொலை செய்து உடலை எடுத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு, (44), ஸ்டாலின், (46) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் கொலை செய்து உடலை திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் தா.பேட்டை பகுதிகளுக்கு எடுத்து சென்று பாலங்களின் அடியில் வீசி சென்றது தெரியவந்தது.
அவர்களை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார் ஓட்டுநரான பிரபு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகி தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணுடன் அவர் நெருங்கி பழகி வருவதை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். அதையும் மீறி திரும்பவும் தொடர்பு வைத்திருந்ததால் பிரபுவையும், அவரது நண்பர் ஸ்டாலினையும் அந்த பெண்ணின் உறவினர்கள் நாசுக்காக பேசி அழைத்து சென்று தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து அந்த பிணங்களை திருச்சியில் துறையூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பாலத்துக்கு அடியில் போட்டுவிட்டு போனது தெரியவந்துள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஹரி சூர்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, பல்வேறு போலீஸ் சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஆகியோரை தாண்டி எப்படி 2 உடல்களையும், மாவட்டம் விட்டு மாவட்டம் எடுத்து செல்ல முடிந்தது என்று காவல்துறை வட்டாரத்தில் கேள்வியை எழுப்பி உள்ளது.
- திருச்சி ஷானு