இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசைக்கச்சேரியை மும்பை காவல்துறையினர் திடீரென நிறுத்தச்சொன்னதால், ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் புதிய பார்முலாவை அறிமுகம் செய்து இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் பெற்றார். இதனால், அன்று முதல் இன்றுவரை பட்டிதொட்டி எங்கும் ஏ.ஆர் ரகுமான் இசை ஒலித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஒரே நாயகனாக ஏ.ஆர் ரகுமான் மட்டுமே. தமிழ் மொழி மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழிகளிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அதையும்தாண்டி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இசையமைத்தார்.
இந்த நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி நடத்துவது வழக்கம். அந்த வகையில், மும்பை அடுத்துள்ள பூனேவில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதில், முன்னணி பாடகர்களுடன் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடி அசத்திக் கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இசைக்கச்சேரி நடைபெற்று வருவதால், இசைக்கச்சேரியை உடனே நிறுத்தவேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், தொடர்ந்து இசைக்கச்சோி நடக்கவே, காவல்துறையினர் மேடை ஏறி ஏ.ஆர்.ரகுமானிடம் நேரடியாக விவரத்தை தெரிவித்தனர். இதனால் இசைக் கச்சேரியில் இருந்து ஏ.ஆர் ரகுமான் உடனடியாக வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.