மயிலாடுதுறையில் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்கள் இறங்கி கொண்டிருந்த லாரியில் 48 குவாட்டர் பாட்டில் அடங்கிய ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தில் பறித்துச் சென்றுவிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் வருவது வழக்கம்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று மாலை லாரியில் மது பாட்டில்கள் வந்து இறங்கியது. அதனை ஊழியர்கள் டாஸ்மார்க் கடைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அதனை நோட்டமிட்டு கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் லாரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட 48 குவாட்டர் பாட்டில் அடங்கிய ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
லாரியிலிருந்து ஊழியர் இறங்கி விரட்டி சென்றும் அந்த இளைஞர்களை பிடிக்க முடியவில்லை. திருடி சென்ற 48 மதுபாட்டில்கள் விலை 6 ஆயிரத்து 140 ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சியை வைத்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கு போதே இளைஞர்கள், மது பாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்.விவேக் ஆனந்தன்.