மயிலாடுதுறை: வீரட்டேசுவரர் கோவிலில் போலி சிலை - அதிகாரிகள் அதிர்ச்சி

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்ட் அருங்காட்சியகத்தில் தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை உள்ளது
வீரட்டேசுவரர் கோவில்
வீரட்டேசுவரர் கோவில்

மயிலாடுதுறை வீரட்டேசுவரர் கோவில் சிலை உண்மை தன்மை ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெட்சிணாமூர்த்தி சிலை போலி என்பதும், அது திருடுபோய் தற்போது வெளிநாட்டில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொருக்கை கிராமத்தில் சுமார் 500 வருடங்கள் பழமை வாய்ந்த தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீஞானாம்பிகை சமேத வீரட்டேசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த மாதம் 15-ம் தேதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை போலி என்பதும், ஒரிஜினல் ஐம்பொன் சிலை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, நடத்திய விசாரணையில் திருடப்பட்ட ஒரிஜினல் தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அத்துடன், அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்ட் அருங்காட்சியகத்தில் தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை 1970-ம் ஆண்டு முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பே திருடப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியும், மத்திய மண்டல கூடுதல் எஸ்,பி பாலமுருகன் தலைமையில் கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் 15 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மீண்டும் வீரட்டேசுவரர் கோவிலுக்கு வருகை தந்து மற்ற சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக, மத்திய மண்டல கூடுதல் எஸ்.பி பாலமுருகன் கூறுகையில் , “1958-ம் ஆண்டு வாக்கில் இந்த கோவிலிலிருந்த சிலைகள் அனைத்தும் புகைப்படமாக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் புகைப்பட காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

அதன் பேரில், தற்போது கோவிலில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினோம்.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை இந்த கோவிலுக்கு சொந்தமானது என்பதை ஊர்ஜிதம் செய்து வெளிநாட்டு கலை பண்பாட்டுத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிலையை மீட்க நடவடிக்கை எடுப்படும்.” என்றார்.

கோவிலில் குடமுழுக்கு திருப்பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், உண்மையான தெட்சிணாமூர்த்து சுவாமி சிலை உள்ள இடம் தெரியவத்திருப்பதால் பக்தர்களும், கிராம மக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கும்பாபிஷேக திருப்பணி முடிவடைவதற்குள் தெட்சிணாமூர்த்தி சுவாமி சிலை மீட்கப்பட்டு கோவிலுக்கு கொண்டுவரப்படவேண்டும்' என்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com