மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே மலையடிவாரத்தில் தனியார் ஆசிரமத்தில் யோகா பயிற்சி செய்ய வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை - நத்தம் சாலையில் சத்திரப்பட்டி அருகே மலையடிவாரத்தில் தனியார் ஆசிரமம் ஒன்று செயல்படுகிறது. இங்கு தினசரி யோகா பயிற்சி, தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தியான, யோகா பயிற்சிக்கென இங்கு வருகின்றனர். பயிற்சிகாக சில நாள் ஆசிரம வளாகத்தில் தங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், சில தினத்திற்கு முன்பாக யோகா பயிற்சிக்கென ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாய் சடோ (40) என்ற பெண் அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளார். அவர் 2 நாளுக்கு முன்பு வெளியே சென்று வருவதாக கூறி போனவர் மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாலமேடு போலீசில் ஆசிரமம் நிர்வாகத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பாலமேடு போலீசாரிடம் கேட்டபோது, ‘ சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு ஜப்பான் நாட்டு பெண் யோகா வகுப்புக்கு வந்ததாக சொல்கின்றனர்.
கடந்த 2 நாளுக்கு முன் மதுரை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வரவில்லை. இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாங்களும் சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு வருகிறோம்' என தெரிவித்தனர்.
- மதுரை பாலா