மதுரை அருகே மதுபோதையில் வியாபாரி ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மதுரை அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே வயது முதிர்ந்த வியாபாரி ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாகவும், வெயிலில் வந்த சோர்வு காரணமாகவும், வழியில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மீது எதிர்பாரதவிதமாக மோதியுள்ளார். உடனே அந்த இளைஞர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த இளைஞர்கள், மது போதையில் அந்த முதியவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். அந்த முதியவர் கட்டியிருந்த வேட்டி அவிழ்ந்து கீழே விழுந்துள்ளது. முதியவர் நிர்வாணமான நிலையிலும், அதைப்பற்றிக் கண்டு கொள்ளாத இளைஞர்கள் அந்த முதியவரை மேலும் தாக்கினர்.
அக்கம் பக்கத்தினர் வேகமாக வந்து மது போதையில் இருந்த இளைஞர்களிடம் இருந்து முதியவரை காப்பாற்றினர். இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட முதியவர் புகார் அளிக்கவில்லை.
எனிலும், சம்பவம் பொது வெளியில் நடந்ததாலும். முதியவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் தேடுதல் வேட்டையை அடுத்து மது போதையில் முதியவரை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.