கடலூர்: மதுபாட்டிலில் இறந்து கிடந்த பல்லி - என்ன நடந்தது?

மதுபாட்டிலில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து மதுபிரியர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
பாட்டிலுக்குள் இறந்து கிடந்த பல்லியை காட்டி முறையிடும் மதுபிரியர்
பாட்டிலுக்குள் இறந்து கிடந்த பல்லியை காட்டி முறையிடும் மதுபிரியர்

கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை (எண் 2647) அமைந்துள்ளது. இந்த கடையில் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞர் 130 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டிலை 140 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

அப்போது மதுபாட்டிலை பரிசோதித்தபோது இறந்த நிலையில் பல்லி மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த ராம்கி கடை விற்பனையாளரிடம் கேட்டபோது, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

மேலும் ‘பல்லி கிடந்த பாட்டிலை தந்துவிட்டு வேறு மதுபாட்டிலை வாங்கிக் கொள்ளுங்கள்’ என கடையின் விற்பனையாளர் கூலாக கூறியுள்ளார். ஆனாலும் பல்லி விழுந்து கிடந்த மதுபாட்டிலை தர ராம்கி மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ராம்கி கூறுகையில், ‘தரமற்ற முறையில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பல்லி செத்துக்கிடக்கும் மதுவை நான் குடித்திருந்தால், எனது குடும்பமே நடுத்தெருவுக்கு வந்திருக்கும்.

மது பாட்டிலை பத்து ரூபாய் விலையைவிட அதிகமாக விற்பனை செய்ய தெரிந்த அரசுக்கு மது பிரியர்கள் மீது அக்கறை இல்லை. மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம்போல் தரமற்ற மது விற்பனையால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என குற்றம்சாட்டினார்.

மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவத்தினால் கடைக்கு வந்த மது பிரியர்களில் பலர் அலறியடித்தபடி, ‘ஆளைவிட்டால் போதும் சாமி’ என ஓட்டம் பிடித்தது மதுக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுபிரியர்கள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் தரமற்ற முறையில் மதுபாட்டில் தயாரித்த நிறுவனம் மற்றும் மதுபாட்டில்களின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

நேற்று தஞ்சாவூரில் மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி சிறிது நேரத்திலேயே வலிப்பு வந்து உயிரிழந்தார். அதே இடத்தில் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும் மது குடித்த சிறிது நேரத்தில், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த துயரச்சம்பவம் நடந்த மறுநாளில், மதுபாட்டிலில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த மதுபிரியர்கள் மத்தியில் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com